குருடாயில் அரசியல் பேசும் ஹரிஷ் கல்யாணின் டீசல் விமர்சனம்
வடசென்னையில் நடக்கும் பெட்ரோல் , குருடாயில் உள்ளிட்டவற்றை திருடி விற்கும் மாஃபியா கும்பலுக்கும் காவல்துறைக்கும் இடையே நிகழும் பகை, மோதல், தொழில் போட்டி.
சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ஆக்ஷன் திரைப்படம் " டீசல் ". அதுல்யா ரவி, வினய் ராய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், ரமேஷ் திலக், காளி வெங்கட், விவேக் பிரசன்னா, சச்சின் கேதேகர், ஜாகீர் உசேன், தங்கதுரை, கேபிஒய் தீனா, அபூர்வ சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கிறது.
வடசென்னையில் நடக்கும் பெட்ரோல் , குருடாயில் உள்ளிட்டவற்றை திருடி விற்கும் மாஃபியா கும்பலுக்கும் காவல்துறைக்கும் இடையே நிகழும் பகை, மோதல், தொழில் போட்டி. இதில் அதே மாபியா கும்பலில் இருந்தாலும் தன்னை சுற்றியுள்ள மக்களுக்கு ஏதாவது ஒரு நல்லது செய்ய வேண்டும் என பொறுப்புடன் இருக்கிறார் வாசுதேவன் என்கிற டீசல் ( ஹரிஷ் கல்யாண்).
காட்பாதராக மனோகர் ( சாய் குமார்). இவர்களுக்கு இடையூறாக மொத்த சிண்டிகேட்டையும் வளைக்க திட்டமிடுகிறார் பாலசுப்ரமணி ( விவேக் பிரசன்னா), இடையில் இந்த மாஃபியா கும்பலுக்கு குடைச்சல் கொடுக்கும் கரப்ஷன் காவலர் ( வினய்) முடிவு என்ன என்பது மீதி கதை.
பார்க்கிங், லப்பர் பந்து, என தொடர்ந்து மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்த ஹரிஷ் கல்யாணுக்கு இந்த திரைப்படம் அவரை ஆக்சன் ஹீரோவாக அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். கொடுக்கப்பட்ட பாத்திரத்தையும் உள்வாங்கி சரியாக தனது வேலையை செய்திருக்கிறார். எனினும் என்னவோ அவருடைய கதாபாத்திரம் இந்த அதிரடி ஆக்சன் மற்றும் கனமான கதைக்குள் பொருந்த மறுக்கிறது. அதுல்யா ரவி கதைக்குள் வழக்கறிஞராக இருந்தும் கூட அவரைப் பெரிதாக பயன்படுத்தவே இல்லை.
ஓரிரு வருடமாக " பீர் பாடலுக்கு" பயன்பட்டது போல் படத்திலும் பயன்பட்டிருக்கிறார். இத்தனைக்கும் கதைக்குள் அவரைப் பொருத்துவதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருந்தும் ஏனோ இயக்குனர் அதை செய்யவில்லை. வினய் ராய், முன்பிருந்த படங்களில் அவர் காட்டிய வில்லத்தனத்தை விட இதில் சற்று குறைவுதான். அவரும் அளவான நடிப்பில் அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் செய்து கடந்து செல்கிறார்.
சாய் குமார் படம் நெடுக நல்லவரா கெட்டவரா என கேட்க வைத்து கடைசிவரையிலும் அந்த சந்தேகத்திலேயே நம்மை வைத்திருந்தது அருமை. விவேக் பிரசன்னா , ரமேஷ் திலக், சரண்யா ரவிச்சந்திரன், தங்கதுரை உள்ளிட்ட அனைவருக்குமே அளவான கதாபாத்திரம்தான் அதை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஆழமான ஆராய்ச்சி, ஏராளமான ஆய்வு கட்டுரைகள், பெட்ரோல் டீசல் உள்ளிட்ட அரசியல் என நிறைய இதற்காக மெனக்கெட்டிருக்கிறார் இயக்குனர். இந்தப் பெட்ரோல் அரசியல் பேசுவதற்காக ஒரு கதை எழுத வேண்டும் என நினைத்ததற்கு பாராட்டுக்கள்.
ஆனால் அனைத்தையும் ஒரே கதைக்குள் சொல்லியே தீர வேண்டும் என முடிவு செய்து திரைக்கதை எழுதி இருப்பார் போல இயக்குனர் சண்முகம் முத்துசாமி. சுமார் 8 முதல் 10 மணி நேரம் வெப் சீரிஸ் ஆக சொல்ல வேண்டிய கதையை இரண்டரை மணி நேரம் படமாக கொடுக்க நினைத்தது பார்வையாளனை சோர்வாக்கி விடும்.
திபு நினன் தாமஸ் இசையில் தில்லுபரு ராஜா, பீர் பாடல் ட்ரெண்டிங் ரகம். பின்னணி இசையும் அதிரடி கதைக்கு பொருத்தமாகவே அமைத்திருக்கிறார். ரிச்சர்ட் எம் நாதன் , மற்றும் பிரபு இருவரின் ஒளிப்பதிவில் ஹார்பர் காட்சிகளும், இருட்டில் நிகழும் ஆயில் திருட்டும் பரபரப்பாகவே காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. எடிட்டர் சான் லோகேஷ் கொடுத்த கட் திரைக்கதையை விறுவிறுப்பாக்கி இருக்கிறது.
மொத்ததில் பாமரனுக்கு விளங்காத குரூடாயில் அரசியலை இதுவரை தமிழ் சினிமா பேசியதில்லை. அந்த வகையில் "டீசல்" திரைப்படம் கவனம் பெறுகிறது.
cinemaeditor