மாரி செல்வராஜ் இயக்கிய துருவ் விக்ரமின் பைசன் படம் எப்படி இருக்கிறது?

சாதி மோதலுக்கு நடுவே, ஒரு கபடி வீரரின் போராட்டமான வாழ்க்கை களமே கதை. கபடி விளையாட்டின் மீது வெறியாக இருக்கும் துருவ் விக்ரம், உள்ளூர் அணியுடன் விளையாட சாதி பிரச்சினை தடையாக உள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கிய துருவ் விக்ரமின் பைசன் படம் எப்படி இருக்கிறது?

சாதி மோதலுக்கு நடுவே, ஒரு கபடி வீரரின் போராட்டமான வாழ்க்கை களமே கதை. கபடி விளையாட்டின் மீது வெறியாக இருக்கும் துருவ் விக்ரம், உள்ளூர் அணியுடன் விளையாட சாதி பிரச்சினை தடையாக உள்ளது. ஆனாலும் பள்ளி ஆசிரியர் தூண்டுதலின் காரணமாக போராட்டத்துக்கிடையே ஒவ்வொரு அடியாக முன்னேறுகிறார்.

இதற்கிடையில் இரு பிரிவினரிடையே நிலவும் சாதி மோதல், அந்த ஊரையே கலவரக்காடாக மாற்றுகிறது. இதில் பல்வேறு பழிகளுக்கும் துருவ் விக்ரம் ஆளாகிறார்.

தடைகளை கடந்து மாநில அணிக்காக விளையாடும் துருவ் விக்ரமின் விளையாட்டு நேர்த்தி அனைவரையும் கவர, இந்திய அணிக்கு தேர்வாகும் சூழலும் உருவாகிறது. ஒருகட்டத்தில் ஊரில் கலவரம் வெடிக்க, துருவ் விக்ரமை பல சோதனைகள் சூழ்ந்து கொள்கிறது. 

இறுதியில் என்ன ஆனது? இந்திய அணிக்கு துருவ் விக்ரம் தேர்வானாரா? அவரது போராட்டம் என்ன ஆனது? என்பதே பரபரப்பான மீதி கதை.

'சேட்டை' பிடித்த பையனாக வலம் வந்த துருவ் விக்ரம், இந்தமுறை அழுத்தமான கதாபாத்திரத்தில் கலங்கடித்துள்ளார். வலிகள் நிறைந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்தும் காட்டியிருக்கிறார். 

சண்டை காட்சிகளில் 'ரிஸ்க்' எடுத்துள்ளார். நல்ல கதைகளை தேர்வு செய்யும்பட்சத்தில் இன்னும் பேசப்படுவார்.

அனுபமா பரமேஸ்வரனை வித்தியாசமாக காட்டியிருந்தாலும், அவரது கதாபாத்திரத்துக்கு ஜீவன் கொடுத்திருக்கலாம். ரஜிஷா விஜயனும் கிடைத்த 'கேப்'பில் கிடா வெட்டியுள்ளார்.

அமீரும், லாலும் அனுபவ நடிப்பால் போட்டிபோட்டுள்ளனர். பசுபதியின் நடிப்பும் பிரமிக்க வைக்கிறது. அழகம்பெருமாள், அருவி மதன், அனுராக் அரோரா ஆகியோரின் நடிப்பும் கவனம் ஈர்க்கிறது. எழில் அரசின் ஒளிப்பதிவும், பிரசன்னா கே.நிவாசின் இசையும் படத்தை தாங்கி பிடித்திருக்கிறது.

சுமாரான முதல் பாதியை, சுவாரசியமான இரண்டாம் பாதி காப்பாற்றி விட்டது. எதார்த்தமான காட்சிகள் என்றாலும், சில இடங்களில் திரைக்கதையின் போக்கு திசைமாறி விட்டதை உணரமுடிகிறது. ஆங்காங்கே சில 'உச்'கள் இருந்தாலும், பரபரப்பான காட்சிகள் அதை மறக்கடிக்கின்றன.

எளிமையான, எதார்த்தமான கதைக்களத்தில் மீண்டும் தனக்கே உரிய பாணியில் காட்சிகளை உணர்வுப்பூர்வமாக நகர்த்தி கவனம் ஈர்த்துள்ளார், இயக்குனர் மாரி செல்வராஜ்.

பைசன் - வலி நிறைந்த வாழ்க்கை